சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 13.11.2025 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படியை 1.7.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (14.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஜே.எஸ்.ஆர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நர்சுகள் பொதுநல சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றியம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம், தமிழ்நாடு அரசு தேர்வு துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம், தீபம், டாக்டர் இராதா கிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
