×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில், ஜன. 6: காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்
சாய்ந்தன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் ஜேஜிஎல், எல்எல்ஆர் ரக நெற்பயிர்கள் நிவர் மற்றும் புரெவி புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் ஈரப்பதம் அதிகமாகி நிலத்தில் சாய்துள்ளன. இதனால் தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக குமராட்சி ஒன்றியத்தில் எடையாறு, வவ்வால்தோப்பு, பிள்ளையார்தாங்கல், செங்கழுநீர்பள்ளம், நடுத்திட்டு மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் ரெட்டியூர், ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தில் 2 அடி அளவுக்கு சேறாக காணப்படுகிறது. மிக குறுகியகால அதாவது 125 நாள் பயிரான இவற்றை அனைத்து கிராம பகுதிகளிலும் சுமார் 20 சதவீதம் வரை பயிரிட்டுள்ளனர். சாய்ந்துள்ள பயிரை தற்போது அறுவடை செய்யும் பட்சத்தில் அதிகளவில் நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிகிறது. இதனால் அறுவடை இயந்திரங்களை வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைத்தும் பயனில்லாமல் விவசாயிகள் கடந்த 10 நாட்களாக காத்து கிடக்கின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடம் மற்றும் கீழணை பாசன விவசாய சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில்,  கடந்த செப்டம்பர் மாதத்தில் நெல் விதைப்பு செய்து கடந்த 3 மாதங்களாக பாதுகாப்பாகவும் கண்ணும் கருத்துமாகவும் பராமரித்து வந்தோம். புயல் வெள்ளங்களிலும் தப்பி பிழைத்து, தற்போது அதிக ஈரப்பதத்துக்கு இரையாகியுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து 22 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் வெறும் 10 மூட்டைகளே தேறியுள்ளன.

தற்போது அந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பட்சத்தில் அறுவடை இயந்திரம், ஆட்கள் கூலி ஆகியவற்றுக்கே இது சரியாகிவிடும். கடந்த ஆண்டு ரூ.2,500 கொடுத்த இடத்தில் இவ்வாண்டு இயந்திரங்களுக்கு ரூ.2,700 ஆக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழக அரசு நிர்ணயித்த 20 சதவீத ஈரப்பதத்தை தாண்டி இருப்பதால் அரசு கொள்முதல் செய்வதில்லை. வேறு வழியின்றி 60 கிலோ நெல் மூட்டை ஒன்றை ரூ.800க்கு தனியாரிடமே கொடுக்க வேண்டியுள்ளது. நெல்லை உலர்த்தி கொடுக்க நினைத்தால் சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள பாளையங்கோட்டைக்கு சென்று அங்குள்ள தனியாரிடம் குறிப்பிட்ட விலை கொடுத்து உலர்த்திவிட்டு மீண்டும் இங்கு கொண்டு வரவேண்டும். இதன்மூலம் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதுடன் நேர செலவும் அதிகரிக்கிறது.

மேலும் சிலர் அறுவடை செய்த நெல்லை வீடுகளுக்குள் நிரப்பி அதன் மீது தூங்கும் அவலநிலையும் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 12 வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதால் உளுந்து பயிர் விதைப்பதிலும், டிபிடி ரக நெற்பயிர் அறுவடை ஆகியவற்றை எண்ணி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஈரப்பதம் அதிகமுள்ள நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்து அதனை உடனடியாக அரிசியாக்கியது. அதே முறையை இப்போதும் பின்பற்றினால் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேக்கமடைவது, முளைத்துப்போய் பாழடைவதையும் தவிர்க்க முடியும்.

நடப்பு ஆண்டு நெல்லின் ஈரப்பதத்துக்கு எந்த ஒரு வரம்பும் இன்றி அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் வரும் ஆண்டுகளில் தற்போது உள்ள தமிழக அரசின் மார்க்கெட் கமிட்டிகளில் நெல்லுக்கான மின் உலர்த்திகளை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக அரசே கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

Tags : area ,paddy fields ,Kattumannarkovil ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...