×

செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக விருதை 1957ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இவ்விருதை தமிழ்நாட்டில் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

தற்போது அந்த பட்டியலில் பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியும் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவ.13 அன்று ‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபேநூலக’த்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார். அந்த விழாவில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது;

ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி அவர்களுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி அவர்கள், இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Thota Dharani ,Chennai ,French government ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...