×

SIRக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பபணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில், தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கி விட்டது; ஒரு மாதத்தில் முடிக்க உள்ளனர். இது பருவமழை காலம் என்பதால் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. குறிப்பாக மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் உள்ளிட்ட பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே தான் எஸ்.ஐ.ஆர் நடத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல. லட்சக்கணக்கான படிவங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை. தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் தராமல் அவசர அவசரமாக மேற்கொள்வது மக்களை பெருமளவுக்கு பாதிக்கும். லட்சக்கணக்கான படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் அதற்கு போதிய அவகாசம் இல்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் இணையதள சேவை இல்லை, மலை கிராமங்களில் இணைய சேவை பிரச்சனை உள்ளது என வாதிடப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில், உயர் நீதிமன்றங்களில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான மனுக்களை விசாரிக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த வழக்கில் அதிமுகவையும் இணைத்துக் கொள்ள கோரி இடையிட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றங்களில் எஸ்.ஐ.ஆர் குறித்து விசாரணை நடத்தக்கூடாது எனவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை கோரப்பட்டது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்தனர். குறைபாடுகளை தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நினைக்கின்றோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவாக அதிமுக தாக்கல் செய்த இடையிட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அம்மனுவை அதனை திரும்ப பெற்று விட்டு ரீட் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Election Commission ,Dimuka ,SIR ,Delhi ,Election Commission of India ,Union Territories ,Tamil Nadu ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...