திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கோரிக்கை அனைத்தும் தீர்க்கப்படும் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி

கடலூர், ஜன. 5: நான்கு மாதங்களுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கோரிக்கை அனைத்தும் தீர்க்கப்படும் என மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்று அதிமுகவை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். கிராம சபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  கிராம சபை வருடத்துக்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அதிமுக ஆட்சியில் கிராம சபை நடத்தப்படவில்லை. எனவே எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக சார்பில் கிராம சபையை நடத்தி வருகிறோம். கிராம சபை கூட்டங்களில் அதிமுக அரசின் கொள்ளைகளை மக்களின் மனதில் பதிய வைத்து வருகிறோம். கைது செய்தாலும் கவலையில்லை என்று தடையை மீறி கிராம சபையை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார்கள். தலைவர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதம் பணிகள், உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித பணியிடங்கள் வழங்கினார். ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தார்.

பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழு 1989ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. அதில் பெண்களுக்கு வங்கிக்கடன், மானியங்கள் மற்றும் சுழல் நிதியை வழங்கினோம். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் அனைத்து மாவட்டங்களிலும் பல மணி நேரங்கள் நின்று கொண்டே அனைவருக்கும் சுழல் நிதியையும் மானியங்களையும் வழங்கினேன். உள்ளாட்சி துறைக்கு அமைச்சராக இருப்பவர், எடப்பாடியையே முந்தி அதிகளவு ஊழல் செய்து வருகிறார். அவர் எஸ்.பி.வேலுமணியல்ல ஊழல்மணி என்று பேசினார்.

Related Stories:

>