விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பரிசோதனை மையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து 20 லட்சம் பொருட்கள் சேதம்

திண்டிவனம், ஜன. 5: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அலுவலக கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மைக்ரோ டெக்னாலஜி (கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பார்க்கும்) அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களில் தீப்பற்றி கரும்புகை மண்டலமாக வெளியே வந்தது. இதுகுறித்து உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

 முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஏசி தீ பிடித்து எரிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பணியிலிருந்த 2 ஊழியர்கள் அறையை பூட்டி விட்டு டீ குடிக்க வெளியே சென்றதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் அந்த அறையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கொரோனா பரிசோதனை பொருட்கள், ஏசி, கணினி, கொரோனா பரிசோதனை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: