ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள லட்சுமி நகரில் சேலம் கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதி வெங்கடேஷ், கீர்த்தனா வசித்து வந்தனர். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா கடந்த 16ஆம் தேதி அன்று நள்ளிரவில் மாயமானது. பாலத்திற்கு அடியில் கொசு வலை போர்த்தி கொண்டு குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்தனர். திடீரென விழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

இதையறிந்து பெற்றோர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் உறங்கி கொண்டிருந்த இடத்தை கவனித்த போது, கொசு வலை கிழிந்திருந்தது தெரிய வந்தது. எனவே கொசு வலையை கத்தியால் கிழித்து, அதன் வழியே குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்தனர். பின்னர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது, மூன்று பேர் நள்ளிரவில் வந்து சென்றது தெரிய வந்தது. அவர்கள் தான் ஒன்றரை வயது பெண் குழந்தையை கடத்தி சென்றிருக்கக் கூடும் என்று போலீசார் கருதினர். இதுதொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 16ம் தேதி கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை நாமக்கல்லில் போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தை கடத்தல் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: