×

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு சுற்றுலா மாளிகை மூடல்

* பயன்பாடின்றி பழுதடைந்ததால் பயன்படுத்த முக்கிய பிரமுகர்கள் அச்சம்

* மீண்டும் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி : தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு சுற்றுலா மாளிகையில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு மறுப்பதால் நிரந்தரமாக மூடப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் பழமையான அரசு சுற்றுலா மாளிகை பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த சுற்றுலா மாளிகையை கட்டுவதற்காக 1.8.1960 அன்று அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஓரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுலா மாளிகையை கடந்த 12.12.1961 அன்று காமராஜர் திறந்து வைத்தார்.

கடற்கரையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய அரசு அதிகாரிகள் பலர் தங்கி வந்தனர். இந்த விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிதாக கூடுதல் சுற்றுலா மாளிகை கடந்த 1982ம் ஆண்டு கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நாளடைவில் இந்த சுற்றுலா மாளிகையின் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. இங்கு தங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டினர். தூத்துக்குடி வரும் முக்கிய பிரமுகர்கள் தனியார் விருந்தினர் மாளிகைகள், துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்கினர். இந்த நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே புதியதாக கூடுதல் அரசு சார்பில் சுற்றுலா மாளிகை கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த புதிய சுற்றுலா மாளிகை பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையின் பயன்பாடு முற்றிலும் நின்றுபோனது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் முகாம் அலுவலகம் இந்த சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வந்தது.

ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை காலம் முடிந்த பிறகு சுற்றுலா மாளிகை மீண்டும் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இந்த வளாகத்தில் புதர்கள் சூழ்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. அங்கிருந்த பூங்கா பகுதி சுவடே தெரியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது.

மேலும் இந்த சுற்றுலா மாளிகையில் தற்போது பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பெருகி, அருகில் உள்ள இனிகோநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் இந்த சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அல்லது பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் தற்போதும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நிலையில் இதனை அரசு துறை அலுவலகங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Tourist House ,Kamaraj ,Thoothukudi South Coast Road ,Thoothukudi ,Thoothukudi South Coast Road… ,
× RELATED மதுரையில் நடைபெற்ற TN Rising...