×

கொடைக்கானலில் பரபரப்பு மருத்துவமனைக்குள் புகுந்தது காட்டுமாடு

*நோயாளிகள் அலறி ஓட்டம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் தனியார் மருத்துவமனைக்குள் காட்டுமாடு புகுந்ததால் சிகிச்சை பெற வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுமாடுகள் கூட்டமாகவும், தனியாகவும் நகர் பகுதியில் உலா வருவதும், குடியிருப்பு பகுதியில் முகாமிடுவதும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை கோக்கர்ஸ் வாக் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் திடீரென ஒற்றை காட்டுமாடு நுழைந்தது. அங்கு பரவி கிடந்த பசும்புற்களை மேய்ந்தபடி நகராமல் அங்கேயே நீண்ட நேரம் முகாமிட்டது. அப்போது அங்கு வந்த தற்காலிக வேட்டை தடுப்பு பணியாளர் ஒருவர், காட்டுமாட்டை வேறு பகுதிக்கு விரட்ட முயற்சித்தார்.

அப்போது காட்டுமாடு மூர்க்கமாக அவரை தாக்குவது போல் சென்றது. இதை கண்டு சிகிச்சை பெற வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வேகமாக சென்ற காட்டுமாடு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவுக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்டை தடுப்பு காவலரும் தொடர்ந்து பின்னால் சென்று நீண்டநேரம் போராடி காட்டுமாட்டை விரட்டினார்.

இதனால் ஆவேசமாக காட்டுமாடு தறிகெட்டு ஓடியதால் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் பதறியடித்து அங்குமிங்கும் சிதறி ஓடினர். பின்னர் ஒருவழியாக மருத்துவமனை வளாகத்தில் இருந்து காட்டுமாடு வெளியேறியது. அதன்பின்பே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Tags : Kodiakanal ,KODAIKANAL ,Dindigul district ,Godaikanal mountain ,Nagar ,
× RELATED மதுரையில் நடைபெற்ற TN Rising...