சென்னை: கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் முந்தைய வாக்காளர் விவரங்களை கண்டறியும் வகையில் இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை நேரடியாக வழங்கி வருகின்றனர். முந்தைய தீவிர திருத்தத்தின் வாக்காளர் விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக இணையதள தேடல் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.elections.tn.gov.in/-ல் தீவிர திருத்தம் 2002/2005 வாக்காளர் பட்டியலின் விவரங்கள் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இத்தளத்தில் தங்கள் விவரங்களை தேடி கண்டறியலாம். இவ்வசதி, நடைமுறையிலிருக்கும் சிறப்பு தீவிர திருத்தத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பங்கேற்க உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
