புதுச்சேரி பாஜ பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசியவுடன் கூட்டம் கலைந்தது

புதுச்சேரி, ஜன. 4: புதுவையில் மத்திய அமைச்சர் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசி முடித்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். புதுச்சேரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, நடிகை குஷ்பு, பாஜ மேலிட  பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆனால், நேற்று காலை பரவலாக மழை பெய்ததால் ஏஎப்டி திடலில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தலைக்கு ரூ.200 என கூறி அழைத்து வந்து சேறும், சகதியுமான இடத்தில் நிற்க வைத்துவிட்டனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என கூட்டத்துக்கு வந்த பெண்கள் புலம்பி கொண்டிருந்தனர். இருப்பினும், நடிகை குஷ்புவை பார்ப்பதற்காகவே பொறுமையுடன் காத்திருந்தனர். பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசி முடித்ததும் கூட்டம், கூட்டமாக அனைவரும் கலைந்து சென்றனர். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசும்போது கேட்பதற்கு ஆளில்லாமல் நாற்காலிகள் மட்டுமே கிடந்தன. மத்திய அமைச்சருக்காக பல லட்சம் செலவு செய்து கூட்டத்தை கூட்டியும், அவருடைய பேச்சு கேட்காமல் அனைவரும் கலைந்து சென்றது புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

Related Stories:

>