காதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயற்சி: தொழிலாளி அதிரடி கைது

கடலூர், ஜன. 4: காதலித்து திருமணம் செய்த மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்த கூலித் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மகள் அன்பரசி (24). நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் ரகுராமன் (27), கூலித்தொழிலாளி .கடந்த 2012ம் ஆண்டு கடலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது ரகுராமன் மற்றும் அன்பரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் காதலித்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் 2015ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ரகுராமன் கடலூரில் உள்ள அன்பரசி பெற்றோர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் அன்பரசி கர்ப்பமான நிலையில் ரகுராமன் கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதையடுத்து கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ரகுராமனுக்கு தஞ்சாவூரில் திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று உள்ளது.

இது குறித்து அறிந்த அன்பரசி நெல்லிக்குப்பத்தில் உள்ள ரகுராமன் வீட்டிற்கு சென்று தனது நிலையை கூறியபோது ரகுராமன்,அவரது தந்தை பாஸ்கரன், தாய் கயல்விழி, உறவினர் ரஞ்சித் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடித்துள்ளனர்.இதையடுத்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அன்பரசி கொடுத்த புகாரின் பேரில் ரகுராமன், அவரது பெற்றோர் பாஸ்கரன், கயல்விழி, உறவினர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் ரகுராமனை கைது செய்தனர். மேலும் அன்பரசி மாமனார் பாஸ்கரன், மாமியார் கயல்விழி மற்றும் உறவினர் ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>