- திருவள்ளூர்
- திருவள்ளூர் உழவர் சந்தை
- துணை இயக்குநர்
- சசிரேகா
- திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை
- சசிரேகா…
திருவள்ளூர், நவ.7: திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில், வரும் 9ம்தேதி இயற்கை வேளாண் சந்தை நடைபெறுகிறது என்று துணை இயக்குநர் சசிரேகா தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் சசிரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில், இயற்கை வேளாண் சந்தை ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்பேரில், வேளாண் விற்பனை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இயற்கை விவசாய ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து இயற்கை சந்தையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த இயற்கை வேளாண் சந்தைகளில் பொதுமக்கள் திரளாக வந்து, மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு இயற்கை பொருட்களை வாங்கிச் சென்றனர். தற்போது, பொதுமக்களுக்கு இயற்கை விளை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 9ம்தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் சந்தை நடைபெறவுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் அனைவரும் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். அப்போது, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகள், இயற்கை விதைகள், மூலிகை பொருட்கள் மற்றும் இயற்கை அழகு சாதன பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இயற்கை வேளாண் சந்தையில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
