×

ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, நவ.5: ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகளை அடுத்த தவணை தண்ணீர் திறப்பதற்குள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மார்ச் மாதம் 28ம்தேதி வந்தடைந்தது. இந்த, தண்ணீர் கடந்த ஜூன் 30ம்தேதி வரை தமிழகத்திற்கு 1.6 டிஎம்சி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டிஎம்சி தண்ணீர், ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கிய, கடந்த செப்டம்பர் 15ம்தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினாடிக்கு 2000 கன அடியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர், கடந்த வாரம் 3.8 டிஎம்சியுடன் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் நிறுத்தப்பட்டதால், கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 7வது மாதமாக தண்ணீர் வந்ததால் கால்வாய் சேதமடைந்தது. மேலும், தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அடுத்த தவணை ஜனவரி மாதம் ஆந்திர அரசு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குவதற்குள் சிட்ரபாக்கம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், தொம்பரம்பேடு ஆகிய பகுதியில் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Krishna Canal ,Uthukkottai ,Chitrapakkam ,Telugu Ganga river ,Chennai… ,
× RELATED அம்பேத்கர் நினைவு நாளில் 2034...