டெல்லி: பீகார் இளைஞர்களின் கனவு மற்றும் ஆசையை பாஜக கூட்டணி அரசு அழித்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பீகாரில் இளைஞர்களுடன் உரையாடிய விடியோவை இணைத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்;
சில நாட்களுக்கு முன்பு, பீகார் இளைஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து உரையாடலில் ஈடுபட்டேன். மேற்கண்ட அனைத்து துறைகளிலும் பீகார் மோசமான நிலையில் இருப்பதற்கு ஒரே ஒரு குற்றவாளி பொறுப்பு என்றால், அது பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் அரசுதான். பீகார் இளைஞர்களுக்கும் இது தெரியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மோடி-நிதிஷ்குமார் அரசு, பீகார் இளைஞர்களின் கனவுகளை நசுக்கி விட்டது. மாநிலத்தை கைவிட்டு விட்டது. ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தை கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது. உதாரணமாக,
*கல்வி
*வேலைவாய்ப்பு
*சுகாதாரம்
*மனித மேம்பாடு
என அனைத்திலும் பீகார் கீழ்நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இது, இரட்டை என்ஜின் அரசு, மாநிலத்தை எப்படி பின்னுக்கு இழுத்துச் சென்றுள்ளது என்பதை காட்டும் கண்ணாடி. நான் சந்தித்த பீகார் இளைஞர்கள் நம்ப முடியாத அளவுக்கு நம்பிக்கைக்குரியவர் என்றும், புத்திசாலிகள் என்றும் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரகாசிக்க முடியும். ஆனால், மாநில அரசு, அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக, வேலையில்லா திண்டாட்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி விட்டது. தற்போது, மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. நீதிக்கான மகா கூட்டணி வெற்றியின் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.
