×

அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 பீகாரில் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு: கள் விற்பனைக்கு அனுமதி என வாக்குறுதி

 

பாட்னா: பீகாரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள், விஐபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்த மகாகத்பந்தன் எனும் இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.

இதில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி மற்றும் பிற இந்திய கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்டு 32 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இதில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக அரசு அமைந்த 20 நாட்களில் சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்த 20 மாதத்திற்குள் அனைத்து குடும்பத்திற்கும் அரசு வேலை வழங்கும் பணி தொடங்கப்படும். அரசுத் துறைகளில் உள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்படுவார்கள். மகளிர் சுய உதவிக் குழுவினரும் அரசு பணியில் நிரந்தமாக்கப்பட்டு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு ரூ.500 விலையில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் ரூ.25 லட்சம் இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும். விதவை, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,500 பென்ஷன் வழங்கப்படும்.

மிகவும் பின்தங்கிய வகுப்பினரை அட்டூழியங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை போன்ற சட்டம் உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த 300 மாணவர்கள் உதவித்தொகையுடன் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். வக்பு சட்ட திருத்தம் பீகாரில் அமல்படுத்த அனுமதிக்க விடமாட்டோம்.

புத்த கயாவில் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புத்த மத கோயில்கள் பவுத்த சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். கள்ளு மீதான தடையை நீக்க, கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 25 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Tags : India Coalition ,Bihar ,Patna ,India Alliance ,
× RELATED அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை,...