சென்னை: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு நவம்பர் 4 அல்லது 5ம் தேதி பொதுக்குழுவை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதேநேரத்தில் 10ம் தேதிக்கு பிறகு பிரசாரத்தை தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு கூட சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயம்பட்டவர்களையும் பார்க்காமல் சென்னைக்கு அவசரமாக கூட்டத்தை பாதியில் முடித்து விட்டு திரும்பினார். அவருடன் அவருடைய ஆட்களும் திரும்பி விட்டனர்.
இந்தநிலையில் இறந்த 41 பேரில் 37 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்த விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்க வைத்து அவர்களை சந்தித்தார். ஏற்கனவே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கியது. நடிகர் விஜய், தனது கட்சி சார்பில் ரூ.20 லட்சம் வழங்கினார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக விஜய், எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி பிரசார கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அதேநேரத்தில், நடிகர் விஜய் வருகிற 4 அல்லது 5ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் வருகிற 10ம் தேதிக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பிரசாரம் அல்லது பொதுக்கூட்டம் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் ஒப்புதலோடு நடைபெறும் இந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
