வேலூர், அக். 29: ஆந்திராவில் இருந்து வாங்கிக்கொண்டு ஈரோடுக்கு, பஸ்சில் 8 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை காட்பாடி சோதனைச்சாவடியில் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வேலூர் மது விலக்கு பிரிவு போலீசார் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்திருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது பையை சோதனை செய்ததில், கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு ஈரோடுக்கு செல்வது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
