- திருவள்ளூர் மாவட்டம்
- புயல் மோந்தா
- சென்னை
- காக்கிநாடா
- புயல் மோந்தா
- வங்காள விரிகுடா
- ஆந்திரப் பிரதேசம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் சென்னைக்கு அருகே 500 கிமீ தொலைவில் மெல்ல நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிய பிறகு முதல் புயல் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ளது. புயலாக வலுப்பெறும் வரையில் கடந்த 20ம் தேதியில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த புயல் இன்று இரவு ஆந்திராவில் கரையைக் கடக்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 26ம் தேதி நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவில் ‘மோன்தா’ புயலாக வலுப்பெற்றது.
மேலும் அந்த புயல் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. நேற்று அது மேற்கு- வட ேமற்கு திசையில் மேலும் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்கிழக்கில் 530 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 600 கிமீ தொலைவிலும், அந்தமானுக்கு மேற்கில் 850 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இந்நிலையில், மோன்தா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும். இன்று மாலையில் ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் இருக்கும். இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது.
அதேபோல, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து நேற்றும் அதே பகுதியில் நிலை கொண்டது. அது இன்று அல்லது நாளை வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளைக் கடந்து செல்லும். மேற்கண்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை நேற்று பெய்தது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்ளகளிலும் நேற்று மழை பெய்ததால் அங்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று மோன்தா புயல் இன்று இரவு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்பதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 கிமீ வேகம் முதல் 100 கிமீ வேகத்தில் வீசும். அதேபோல ஆந்திர கடலோரப்பகுதிகளிலும் இன்று காலை முதல் சூறாவளிக் காற்று வீசும். மாலையில் தொடங்கி அதிகாலை(29ம் தேதி) வரையில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்திலும் இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசும். 29ம் தேதி மதியம் வரையில் படிப்படியாக வேகம் குறைந்து 70 கிமீ வேகத்தில் வீசும்.
அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இன்று புயல் கரையைக் கடக்கும் என்பதால் தமிழகத்தின் துறைமுகங்களான சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
* பள்ளிகளுக்கு விடுமுறை
மோன்தா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
