×

கரூர் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறிய விஜய்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்

 

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 37 பேரின் குடும்பத்தினரை நேற்று காலை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். அப்போது நடந்த சம்பவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். சம்பவத்தை பிரசார பஸ் மீது இருந்து பார்த்த விஜய், கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்களை கூட சந்திக்காமல் சென்றார். இதனால், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரும் தவெக தலைவர் விஜய் மீதும், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் மீதும் கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.

மேலும், இந்த சம்பவம் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு கடந்த 17ம் தேதி கரூர் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்ட மக்களையும், நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்க விஜய் முடிவு செய்தார். ஆனால் திடீரென இது ரத்து செய்யப்பட்டது. இதனால், நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்து விஜய் மற்றும் கட்சியினரை திட்டி தீர்த்தனர். பின்னர் தீபாவளிக்கு முன்பே இறந்த 41 பேரின் உறவினர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், கரூர் செல்வது சாத்தியமில்லாததால் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை 30வது நாளில் மாமல்லபுரம் வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இந்நிலையில், 37 பேரின் குடும்பத்தினர் கரூரில் இருந்து 6 சொகுசு பஸ்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்து மாமல்லபுரத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை சந்திக்க சென்னை பனையூரில் இருந்து கார் மூலம் நேற்று காலை 8 மணிக்கு மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதிக்கு விஜய் வந்தார்.

அப்போது, இறந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பகிரங்க மன்னிப்பு கேட்டார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் மற்றும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவாத கடிதம் ஆகியவற்றை வழங்கினார். காயம் அடைந்தவர்களில் 15 பேரை மட்டும் அழைத்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

ஆனால் 180 பேர் காயம் அடைந்தனர். ஆனால் மாவட்ட செயலாளருக்கு நெருக்கமான 15 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. காலை 9 மணி முதல் 5 மணி வரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்துள்ளார். அனைவருக்கும் சைவ சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

* என்னை யாரும் கூப்டல…

திருப்பூரை சேர்ந்த ஒருவர் கூறுகையில், எனது தாயை அழைத்துக்கொண்டு கரூர் பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி எனது தாய்க்கு முதுகெலும்பு உடைந்தது. கரூரில், உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு படுக்கை வசதி இல்லை. இதனால், எனது தாயை திருப்பூருக்கு கூட்டிச்சென்று வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை மாமல்லபுரத்தில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறுவது தெரிந்தது. அதனால் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி, மாமல்லபுரத்தில் விஜய்யை சந்தித்து நிவாரணம் கேட்க வந்தேன். ஆனால் என்னை யாரும் அழைக்கவில்லை உள்ளே அனுமதிக்கவில்லை என்றார்.

* விஜய் சந்திப்பை தவிர்த்த 3 குடும்பத்தினர்

கரூரில் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 3 குடும்பத்தினர் விஜய்யை சந்திப்பை தவிர்த்தனர். கரூர் மாவட்டம் ஏமூரை சேர்ந்த பிரித்திக்(10) என்ற சிறுவனின் குடும்பத்தினரும், அரவக்குறிச்சி தாலுகா தொக்குபட்டியை சேர்ந்த அஜிதா(21) என்பவரது குடும்பத்தினரும், பசுபதிபாளையம் வடிவேல்(54) என்பவரது குடும்பத்தினரும் விஜய்யை பார்க்க விருப்பமில்லை என கூறி சென்னை செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

* வாடிய முகத்துடன் காத்திருந்த தந்தை

கரூர் கூட்ட நெரிசலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் மகன் மோகன் (19) பரிதாபமாக இறந்தார். இந்நிலையில், விஜயிடம் ஆறுதல் பெற கந்தசாமிக்கு தவெக ஈரோடு மாவட்டச் செயலாளர் அழைப்பு விடுக்காத நிலையில், கந்தசாமி நேற்று முன்தினம் இரவு பஸ் ஏறி நேற்று காலை மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதி நுழைவாயில் பகுதிக்கு வந்தார். அவரை, பரிசோதித்த பவுன்சர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால், வாடிய முகத்தோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது அமர்ந்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், நிர்வாகிகள் வந்து அரை மணி நேரத்துக்குப் பிறகு கந்தசாமியை உள்ளே அழைத்துச் சென்றனர்.

Tags : Vijay ,Karur ,Chennai ,Mamallapuram ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்