×

தூத்துக்குடி அருகே 4 கி.மீ.தூரத்துக்கு திடீரென சிவப்பு நிறமாக மாறிய கடல் நீர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல் பகுதி 4 கி.மீ. தூரத்துக்கு திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன. பவளப்பாறைகள் நிறைந்த இம்மாவட்ட கடற்கரை பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர், தருவைகுளம் பகுதியில் நேற்று சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோரம் திடீரென சிவப்பு நிறமாக காட்சி அளித்தது. தொடர்ந்து அதிக அளவில் பஞ்சு போன்ற ஒரு பொருள் கடற்கரையோரம் ஒதுங்கியது. திடீரென சிவப்பு நிறத்தில் கரை ஒதுங்கிய பொருளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கடல்வள ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் கேட்ட போது, ‘தருவைகுளம் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பது ஒருவகையான கடல் பாசி. இது மழைக்காலங்களில் கரை ஒதுங்குவது சாதாரணமாக, வழக்கமான ஒன்று தான். இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை’ என்றார்.

Tags : Thoothukudi ,Taruvaikulam Sea ,Tuticorin district ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து