சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 2708 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 16.10.2025 அன்று, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனமே இல்லாத நிலையில் தற்போது காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் புதிய அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் விண்ணப்பிக்க காத்திருக்கும் தகுதி உள்ளவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தற்போதைய அறிவிப்பாணையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் பணி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.
