×

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ரகசிய திட்டப்படி அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.33,000 கோடி முதலீடு: அமெரிக்க பத்திரிகையின் அறிக்கையால் பரபரப்பு; மக்கள் சேமிப்பில் முறைகேடு நடப்பதாக காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ரகசிய திட்டப்படி எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தில் ரூ.33,000 கோடியை முதலீடு செய்வதாக அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறான வழியில் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் வரலாறு காணாத முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023ல் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நீண்டகாலம் விசாரணை நடத்தி சமீபத்தில் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தது. இதற்கிடையே, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அதானி குழுமம் பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அமெரிக்காவில் விசாரணை நடத்தப்பட்டது. இவ்விவகாரங்களால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்த நிலையில், அதானி குழுமத்தை நெருக்கடியில் இருந்து மீட்க ஒன்றிய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையும், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும் ரகசிய திட்டம் தீட்டியதாக அமெரிக்க பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.33 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதாகவும், அதன் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் அதானி துறைமுகங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம் வெளியிட்ட ரூ.5,000 கோடி பத்திரங்களை எல்ஐசி முழுமையாக வாங்கியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானி குழுமம் ஆபத்தில் சிக்கும் போதெல்லாம் இந்திய அரசு அதை காப்பாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மோதானியின் (மோடி மற்றும் அதானி) கூட்டு முயற்சியானது எல்ஐசியின் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பை எவ்வாறு தவறாக பயன்படுத்தியிருக்கிறது என்பது குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக எல்ஐசியின் ரூ.33,000 கோடியை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர். மோதானியின் மெகா மோசடிகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையால் மட்டுமே நிரூபிக்க முடியும் என கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பாக நாங்கள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளோம். முதல்கட்டமாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு, எல்ஐசி எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் சராசரி சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு, மோடி அவர்களின் சேமிப்பை அதானியை பிணை எடுக்க பயன்படுத்துகிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை மீறல் இல்லையா? அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டதற்கான காரணத்தை மோடி அரசு விளக்குமா? இதற்கு முன் 2023ல் அதானியின் பங்குகள் 32 சதவீதம் சரிவு ஏற்பட்ட போதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் ரூ.525 கோடியை அதானி எப்பிஓவில் முதலீடு செய்தது ஏன்? மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். அதற்காக 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொள்கையடிக்கிறார்’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமம் எந்த பதிலும் தரவில்லை.

* யார் தலையீடும் இல்லை
அமெரிக்க பத்திரிகையின் குற்றச்சாட்டுகளை எல்ஐசி மறுத்துள்ளது. அதன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில், ‘‘எல்ஐசியின் முதலீட்டு முடிவுகளில் வெளிநபர்களின் தலையீடு இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மையிலிருந்து வெகு தூரத்தில் இருப்பவை. அதன் அறிக்கையில் கூறியிருப்பதை போல, எந்த ஆவணமோ, திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை. எங்களின் முதலீட்டு முடிவுகள் அனைத்தும் விரிவான உரிய கவனத்திற்கு பிறகு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன. இதில் நிதி சேவைகள் துறை உள்ளிட்ட எந்த பிற அரசு அமைப்புகளும் பங்கு வகிப்பதில்லை’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : LIC ,Adani Group ,Union Finance Ministry ,Congress ,New Delhi ,US ,
× RELATED வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு...