×

மாம்பழம் கேட்டு அன்புமணி வந்தா முகத்தை தொங்க போட்டு போவாரு: நடித்து காட்டி ராமதாஸ் கிண்டல்; தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதாக பேட்டி

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று (25ம் தேதி) நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்கிறார். இதற்காக நேற்று அவர் தயாரான நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்திற்கு சேலம் தனியார் மருத்துவமனையில் இருந்து அதிநவீன ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஒரு செவிலியர் பயணிக்கும் வகையிலும், ஐசியு போன்ற அதி நவீன மருத்துவ உபகரணங்களும் இடம் பெற்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு இதய சிகிச்சைக்காக அப்போலோவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு சுற்றுப்பயணம் தொடங்குவதால் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அவர் பயணிக்கும் காருடன் இந்த ஆம்புலன்சும் உடன் செல்லும் வகையில் வரவழைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தர்மபுரி மற்றும் சேலம் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று மாலை 4.10 மணியளவில் மகள் ஸ்ரீகாந்தியுடன் ராமதாஸ் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது வருகின்ற 2026 தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆம்… தொடங்கிவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்… தர்மபுரி மற்றும் சேலம் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்கிறேன், என்றார். தொடர்ந்து மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, ஒரு தரப்பு இல்லை. ஒரு கும்பல் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். சிறிதுநாள் கழித்து முகத்தை தொங்க போட்டு செல்வார்கள் என்ற அவர், சிறிதுநேரம் தலையை தொங்க போட்டபடி நடித்துக் காட்டி, அன்புமணியை சூசகமாக கிண்டலடித்தார்.

பின்னர், அவரிடம் பாமக இரண்டு அணிகளாக இருக்கிறது. பாமகவுக்கு தலைவர் அன்புமணி தான். நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் என திலகபாமா கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, யார் யாரோ, எதனா சொல்லுவாங்க… போப்பா. அதை கேக்குறீங்களே… என கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். தேர்தல் சுற்றுப் பயணத்தை ராமதாஸ் தொடங்கிய நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Anbumani ,Ramadoss ,Tindivanam ,PMK ,Dharmapuri ,Salem ,Tailapuram ,Tindivanam.… ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...