கரூர்: கரூர் வருகை சாத்தியமில்லாததால் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை 27ம் தேதி மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பாதிக்கப்பட்டவர்களின் வீடு, வீடாக சென்று தவெகவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தவுடன் விஜய் சொகுசு காரில் அங்கிருந்து திருச்சி சென்று பின்னர் தனி விமானத்தில் சென்னை திரும்பினார். இதனால் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் தவகெ வினர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு பிறகு, 17ம்தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களின் 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்க விஜய் முடிவு செய்தார். இதற்கான அனுமதி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் நிகழ்ச்சிக்காக கரூர் நகர தவெக நிர்வாகிகள் 2 மண்டபங்களை புக்கிங் செய்து வைத்திருந்த நிலையில் விஜய்யின் கரூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளிக்கு முன்னதாகவே உயிரிழந்த 41 பேர்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டது.
விஜய் கரூர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை, புஸ்ஸி ஆனந்த் சென்னைக்கு வரவழைத்தார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்திய பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சென்னைக்கு வரவழைத்து, மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் வைத்து சந்திக்க விஜய் தற்போது திட்டமிட்டுள்ளார். அவர் 27ம் தேதி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அதாவது சம்பவம் நடந்து சரியாக 30வது நாளில் அவர் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இதற்காக 41 பேரின் குடும்பத்தினர் வீடுகளுக்கு சென்று தவெகவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
