உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கீழக்குப்பம் வேலூர் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு மகேஸ்வரி (40) என்ற மனைவியும் 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது குணசேகர் தனது மனைவி மகேஸ்வரிக்கு இரண்டு புடவைகள் வாங்கி கொடுத்துள்ளார். இதனை கட்ட மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்து வயலுக்கு செல்வதாக கூறி சென்ற மகேஸ்வரி மாலை வரை வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது வயலில் கழுத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
போலீசார் விசாரணையில் 14 வயது மகனே தாயை கொன்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மகன் செல்போன் பார்ப்பதை அடிக்கடி மகேஸ்வரி கண்டித்து வந்துள்ளார். இதனால் தாய் மீது கடும் கோபம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தாய் மகேஸ்வரி வயலுக்கு செல்வதை அறிந்து மகன் அங்கு சென்றுள்ளார். அப்போது உனது தந்தையை போல் நீயும் அடங்கமாட்டாய் என கூறி திட்டியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகேஸ்வரி அடித்துள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றுள்ளார்’ என்றனர். இதையடுத்து, 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
