சென்னை: அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோயம்புத்தூரில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டியதில் ரூ.20 கோடி முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் 2016-21 காலக்கட்டத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. இந்த டெண்டர்கள் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 2 டெண்டர்கள் 2021 சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் வெளிவருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சாவூரில் 208.334 கிலோமீட்டர் தூரம் ெநடுஞ்சாலை பராமரிப்பிற்காக ஆர்.ஆர்.இன்பிரா நிறுவனத்திற்கு ரூ.655.5 கோடி டெண்டர் வழங்கப்பட்டது. ஜெஎஸ்வி இன்பிரா நிறுவனத்திற்கு ரூ.493.366 கோடி டெண்டர் வழங்கப்பட்டது. கேசிபி நிறுவனத்திற்கு ரூ.680.460 கோடிக்கு டெண்டர் வழங்கப்பட்டது. சிவகங்கை மண்டலத்தில் சாலை பராமரிப்பு மற்றும் சாலை அமைப்பதற்காக ரூ.715 கோடி எஸ்பிகே என்ற நிறுவனத்திற்கும், கோவை உக்கடம் ஆத்துப்பாலத்திற்கும் உக்கடம் சந்திப்புக்கும் இடையே பாலம் கட்டுவதற்காக ரூ.121 கோடி ஆர்.ஆர்.இன்பிரா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
இந்த நிறுவனங்கள் எஸ்பி வேலுமணியின் உறவினர்களுக்கு சொந்தமானவை. இந்த நிறுவனங்களுக்கு தரப்பட்ட ெடண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. சாலை பராமரிப்பு மற்றும் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கே டெண்டர் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், விதிமுறைகளுக்கு முரணாக போலி ஆவணங்களை தயாரித்து தகுதி குறைந்த ஜெஎஸ்வி இன்பிரா நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, சாலை பணிகள் மற்றும் மேல்பால பணிகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் ஜெஎஸ்வி நிறுவனத்திற்கு ஜெகதீசன் என்ற பொறியாளர் போலி அனுபவ சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. இதேபோல், மற்ற இரு நிறுவனங்களின் பணிகளை ஆய்வு செய்ததில் அரசுக்கு சுமார் ரூ.20 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதாவது, ஆர்.ஆர்.இன்பிரா மூலம் ரூ.1 கோடியே 66 லட்சமும், ஜெஎஸ்வி இன்பிரா நிறுவனத்தின் மூலம் ரூ.8.5 கோடியும், கேசிபி நிறுவனம் மூலம் ரூ.2.62 கோடியும், எஸ்பிகே நிறுவனம் மூலம் ரூ.7.73 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற பொறியாளர் ஜெகதீசன், ஆர்.ஆர்.இன்பிரா, எஸ்பிகே, ஜெஎஸ்வி, கேசிபி ஆகிய நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 17ம் தேதி புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சாதாரண மக்கள் மீதான வழக்கு வந்தே பாரத் ரயில் வேகத்தில் செல்வதாகவும், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் நகர்வதே இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறையை கண்டித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
* அதிமுக ஆட்சியில் 2016-21 காலக்கட்டத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன.
* இந்த டெண்டர்கள் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
* பணிகளை ஆய்வு செய்ததில் அரசுக்கு சுமார் ரூ.20 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
