×

தலைமை நீதிபதியின் ஷூ விலை ரூ.78,000 என கிண்டலடித்து பதிவு தமிழக பாஜ பிரமுகருக்கு காங்கிரஸ், விசிக கண்டனம்: வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

சென்னை: தலைமை நீதிபதியின் ஷூ விலை ரூ.78ஆயிரம் என கிண்டலடித்து பதிவு செய்த தமிழக பாஜ பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நீதிபதியை நோக்கி செருப்பு வீச முயன்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

பிரதமர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரின் உரிமம், பார் கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக பாஜவை சேர்ந்த முக்கிய பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தலைமை நீதிபதியின் செருப்பு குறித்து விமர்ச்சித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

அவர் தனது டிவிட்டர் பதிவில், தலைமை நீதிபதி அணிருந்திருக்கும் ஷூ விலை என்ற தலைப்பில் படத்துடன் வெளியிட்ட பதிவில், ‘‘வறுமையிலிருந்து எழுந்த மை லார்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அணிந்திருந்த லூயிஸ் உய்ட்டன் காலணிகளின் மதிப்பு ரூ.78,000 மட்டுமே. சில நாட்களுக்கு முன்பு அவர் வறுமையிலிருந்து எழுந்ததாகக் கூறினார். அதே நேரத்தில் அவரது காங்கிரஸ் தந்தை 30 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 7 ஆண்டுகள் எம்பியாகவும், 3 முறை ஆளுநராகவும் இருந்தார். மை லார்ட்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில், ‘‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி செய்த சனாதனி ராகேஷ் கிஷோருக்கு போட்டியாக சாதிய வன்மத்தை வீசியுள்ளார் இந்த நபர். டீ கடை வைத்திருந்த ஏழைத்தாயின் மகன் மோடி அன்றாடம் அணிவிக்கும் கோட் சூட்டின் விலையை விட, நீதிபதியின் ஷூவின் விலை பல மடங்கு குறைவு தான்.

சாதிய அவதூறை பரப்பும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் எம்பியுமான சசிகாந்த் செந்தில் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரச்னை என்பது ஷூ அல்லது அதன் விலை என்பதல்ல. அதை யார் அணிந்திருக்கிறார் என்பது தான். இதுபோன்ற சாதிய மனப்பான்மை உள்ளவர்கள் தான் இது மாதிரி கீழ்த்தரமான முகத்தை காட்டி சமத்துவத்துக்கும், கண்ணியத்துக்கும் மரியாதை கொடுக்காதவர்கள்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Congress ,VVIP ,Tamil Nadu ,BJP ,Chief Justice ,Chennai ,K.S. Radhakrishnan ,Kawai ,Supreme Court ,Rakesh Kishore ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...