×

திருப்பூர் ரயில் நிலையத்தில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்கள்: தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

திருப்பூர்: திருப்பூரில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளியை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு புறப்படுவதால் ரயில் நிலையத்தில், கூட்டம் அலைமோதுகிறது. பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி திருப்பூரில் உள்ள 95% சதவீதம் நிறுவனங்களில் தீபாவளி போனஸ்  வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்ட தங்களது குடும்பத்துடன் கொண்டாட ரயில், பேருந்துகள் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு முதலே தொழிலாளர்கள் புறப்பட துவங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை கோவையிலிருந்து சென்னை வரை செல்லக்கூடிய இண்டர்சிட்டி ரயிலில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பொதுமக்களின் கூட்டமானது காணப்பட்டது. குறிப்பாக பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் இங்கிருந்து சென்னை சென்று அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு மற்றொரு ரயில் மூலமாக செல்வதற்காக இந்த ரயிலில் ஏறினார்கள்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் பேச்சைக் கூட கேட்காமல் படிக்கட்டிகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். மேலும் காலை 6 மணி முதலே டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். பொதுவாக இன்டர்சிட்டி ரயில் இரண்டு நிமிடம் மட்டுமே ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால் அதிக கூட்டம் காரணமாக சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக திருப்பூர் ரயில் நின்று சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruppur ,station ,Diwali ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...