விவசாயிகளுக்காக எந்த போராட்டத்தையும் கையில் எடுப்பதற்கு தயாராக உள்ளோம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி

நெல்லிக்குப்பம், டிச. 29: விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படா விட்டால் எந்த போராட்டத்தையும் கையில் எடுப்பதற்கு தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின்  பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் மற்றும் தேசிய  முதன்மை துணை தலைவர் விக்கிரமராஜா  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தற்போது கரும்பு ஆலைகள்  நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பல பேர் வேலை இழக்கக் கூடிய நிலை  உள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். இங்கு  சிறு, குறு தொழிற்சாலைகள் அமைத்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஓய்வூதியம்  வழங்க சட்டங்கள் அமல் படுத்தப்பட வேண்டும். வணிகர்களின் ஓட்டுகளை சேகரித்து  வருகிறோம். எங்களது வாக்கு வங்கி ஒரு சக்தி வாய்ந்தது என அரசுக்கும்,  அரசியல் கட்சிக்கும் தெளிவுபடுத்த பேரவை குழு செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள்  போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளித்து வருகிறோம். விவசாயிகள்  போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.  விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லையெனில் எந்த போராட்டத்தையும் கையில்  எடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: