காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு 4 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: வீடுகள் சூறை பாஜக செயலாளர் உள்பட 10 பேருக்கு வலை

காட்டுமன்னார்கோவில், டிச. 29: காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேரை வெட்டி, பொருட்களை சூறையாடிய சம்பவத்தில் பாஜக பிரமுகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னாகோவில் அடுத்த ஷண்டன் செல்லியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்(56). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே இடம் சம்பந்தமாக கடந்த ஒரு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கசாமி மகளும், பாலமுருகன் மனைவியுமான திலகவதி(23) என்பவர் மகளிர் குழுவில் ஊக்குநராக இருந்து வருகிறார். இவர் காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று குழு உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார். அதனை வசூல் செய்பவரும் அவரே. இப்படியிருக்க விஸ்வநாதனின் உறவினரான மணிகண்டன் மனைவி ஷோபனா(28) அதே குழுவில் கடன் பெற்றுள்ளார். இந்த மாதம் கடன் தவணை கட்ட காலதாமதம் செய்ததால் திலகவதியின் தந்தை தங்கசாமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த திலகவதி கணவர் பாலமுருகன் தனது ஆதரவாளர்கள் 11 பேருடன் நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன் நால்வரின் வீடுகளையும், இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் தலை, கை, கால்களில், படுகாயம் அடைந்த விஸ்வநாதன் மகன் விஜய்(21), செல்வம் மகன் ராஜா (20), மாரிமுத்து மகன் மணிகண்டன் (30), விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (20) உள்ளிட்டோர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மணிகண்டன் புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விஸ்வநாதனின் மகன் விஜய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் தங்கசாமி மற்றும் சுந்தரமூர்த்தி(48) இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான தங்கசாமி மனைவியும் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளருமான தேன்மொழி(43), அவரது மகள் திலகவதி உள்ளிட்ட 10பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>