திண்டிவனத்தில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் துணிகர கொள்ளை பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டிவனம், டிச. 29: திண்டிவனத்தில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று பட்டணம் கிராமத்திலுள்ள விநாயகர் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அய்யனாரப்பன் கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வெள்ளிமேடுபேட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலிலும் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் உண்டியலை உடைக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதுதொடர்பாக வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே, காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டிவனம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து 4  கோயில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பொதுமக்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>