முக்கிய குற்றவாளிகள் 2 பேரிடம் ரூ.6 கோடி சொத்துக்கள் பறிமுதல்: விழுப்புரம் தனிப்படை போலீஸ் அதிரடி

விழுப்புரம், டிச. 28:  தமிழகம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை விழுப்புரம் சிறப்பு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 23 பேர் கொண்ட லாட்டரி விற்பனை முகவர்களை விழுப்புரம் தாலுகா, விக்கிரவாண்டி, வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகநாதன் (50), சையத் டோபி (47) ஆகிய 2 பேரை விழுப்புரம் சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முகவர்களை நியமித்து அவர்களின் கீழ் உதவி முகவர்களாக பலரும் செயல்பட்டு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் கிடைத்த பணத்தில் இருவரும் ரூ. 6 கோடிக்கு சொத்துக்கள், ரூ.30 லட்சத்தில் கார்

வாங்கியுள்ளனர். மேலும் இவர்கள், 33 வங்கி கணக்குகள் மூலம் ரூ.1 கோடிக்கு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து முருகநாதன், சையத்டோபி ஆகியோரிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் ரொக்கம், மதிப்புள்ள கார்,லேப்டாப்புகள் மற்றும் 33 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர்களுக்கு கீழ் யார், யாரெல்லாம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: