×

போலீஸ் நிலையம், சோதனைச்சாவடி என நெல்லையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

நெல்லை: நெல்லை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தச்சநல்லூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தச்சநல்லூர் எஸ்ஐ மகேந்திர குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஊருடையான்குடியிருப்பு காட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருண்குமார் மற்றும் ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவர் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் அரிவாள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். தனது அண்ணன் அருண்குமார் (35) சிறைக்கு அனுப்பப்படுவதை அறிந்து அவரது தம்பியான அஜித்குமார் (30), அதை தடுக்க தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து 2 பைக்குகளில் சென்று, முதலில் தச்சநல்லூர் காவல் நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள கோயில் மீது ஒரு பெட்ரோல் குண்டை வீசினர்.

தொடர்ந்து, அடுத்ததாக தச்சநல்லூர் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனைச் சாவடியிலும், இறுதியாக நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அணுசாலையில் உள்ள தென்கலம் சந்திப்பு பகுதியிலும் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது, ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (எ) ஆப்பிள் (19), அருண்குமாரின் தம்பி அஜித்குமார் (30), பெருமாள் (27), சரண் (19) மற்றும் வல்லவன் கோட்டையைச் சேர்ந்த அருண் (22) ஆகிய 5 பேர் என தெரியவந்தது. இதில் சரணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nella ,Tachanallur police station ,Nella Municipal Police ,Dachanallur ,SI Mahendra Kumar ,Mundinam town ,
× RELATED அம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற பெண் கைது