×

சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் களம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது தேசிய ஜனநாயக கூட்டணி: ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 இடங்களில் போட்டி

 

பாட்னா: பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய ஜனதா தளமும், பாஜவும் 101 இடங்களில் போட்டியிடுகின்றன. பீகாரில் தற்போது உள்ள ஐக்கிய ஜனதா தளம் பாஜ கூட்டணி ஆட்சியில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேரவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். தற்போதைய பேரவையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு முன்பாக பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் முதலே ஆயத்த பணிகளை தொடங்கியது. அதன்ஒரு பகுதியாக பீகாரில் சிறப்பு வாக்களர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.31) இறுதி வாக்காளர் பட்டியலை வௌியிட்டது. அதன்படி பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், பீகார் தேர்தல் தேதியை கடந்த 6ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். இதன்படி, “பீகாரில் மொத்தமுள்ள 243 பேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 6ம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 14ம் தேதி வாக்குள் எண்ணப்பட்டு, முடிவுகள் வௌியிடப்படும்” என்று அறிவித்தார். முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கிவிட்டது. இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜ, ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) ஒன்றிய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தன.

தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதில் பீகார் பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, பீகார் பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும், பாஜ 101 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி 29 இடங்களிலும், ஒன்றிய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பீகார் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

 

Tags : Bihar ,National Democratic Alliance ,Janata Dal United ,BJP ,Patna ,Bihar Assembly ,
× RELATED டெல்லியில் செங்கோட்டை அருகே கார்...