×

சென்ட்ரிங் தொழிலாளி மதுபாட்டிலால் அடித்துக்கொலை கரும்பு வெட்டும் தொழிலாளி கைது தண்டராம்பட்டு அருகே மது வாங்கி தராததால்

தண்டராம்பட்டு, அக். 10: மது வாங்கி தர மறுத்த சென்ட்ரிங் தொழிலாளி மதுபாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கரும்பு வெட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சி மதியாபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(48), சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி மாணிக்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு வாணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த பாலாஜி நகரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி ஏழுமலை(53) என்பவர், வெங்கடேசனிடம் ‘எனக்கும் ஒரு குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி கொடு’ என கேட்டாராம். அதற்கு வெங்கடேசன், ‘என்னிடம் பணம் இல்லை’ என கூறிவிட்டாராம். இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை அங்கிருந்த காலி மதுபாட்டிலை எடுத்து வெங்கடேசன் தலை மீது அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி மாணிக்கம் வாணாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது வாங்கி தர மறுத்த சென்ட்ரிங் தொழிலாளியை மதுபாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tandrampattu ,THANDARAMPATTU, OCT ,Venkadesan ,Vannapuram Uradachi Madiabatnam village ,Tiruvannamalai District Thandarampattu ,
× RELATED காய்ச்சலால் 2வயது குழந்தை பலி சேத்துப்பட்டு அருகே