- விஜய் கூட்ட நெரிசல் சம்பவம்
- தவேகா
- கரூர்
- கரூர் நீதிமன்றம்
- தவேகா நகராட்சி
- பவுன்ராஜ்
- திருச்சி
- விஜய் பிரச்சார நெரிசல்
- வேலுச்சிபுரம்
கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைதாகி திருச்சி சிறையில் உள்ள தவெக மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜின் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த், துணை பொதுசெயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மதியழகனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை கடந்த 29ம்தேதி ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், மதியழகனுக்கு அடைக்கலம் தர உதவியதாக கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் கைது செய்தனர். பின்னர், கரூர் ஜேஎம்1ல் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் அக்.14ம்தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் உள்ள பவுன்ராஜூக்கு ஜாமீன் வழங்க கோரி சேலம் தவெக வழக்கறிஞர்கள் கடந்த 6ம்தேதி கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதாக கூறி ஜாமீன் கொடுக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
