வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

உளுந்தூர்பேட்டை, டிச. 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பழமையான கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். முன்னதாக மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோபூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோல் எம்.குண்ணத்தூர் நிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசித்திபெற்ற பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் கோயிலுக்கு வந்து திரும்பி சென்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்து வழிபட்டனர். திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோயிலில் நேற்று காலை வைக்குண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உலகளந்த பெருமாளை வழிபட்டனர்.

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் சி.மெய்யூர் கிராமத்தில் லட்சுமி நாராயணபெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மழையம்பட்டு, பெரியசெவலை, ஏமப்பூர், சிறுவானூர், சின்னசெவலை, தி.மழவராயனூர், சி.மெய்யூர், பல்லரிபாளையம், தி.புதுப்பாளையம், சித்தலிங்கமடம் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Related Stories: