வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் தரிசனம்

கடலூர், டிச. 26:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வழிபட்டனர்.

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடலூரில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. இதில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தேவநாதப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக பிரவேசம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பெருமாளை வழிபட்டனர்.

 

 கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயில், வில்வநகர் ஆட்கொண்ட பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டது. கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள பெருமாள் சன்னதியிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.     சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சொர்க்கவாசல் வழியாக கோவிந்தராஜப்பெருமாள் பிரவேசித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.

Related Stories: