×

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு!

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (26.09.2025) புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், மற்றும் இரா.சுப்பிரமணியம், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (25.09.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.105 டி.எம்.சி ஆக உள்ளது என்றும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,419 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 9,033 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025, அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 20.22 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,M. ,Government of Karnataka ,Bangalore ,M. C. ,Karnataka ,Kaviri Water Management Commission ,Supreme Court ,New Delhi, ,S. K. ,Haldar ,
× RELATED இருதய இடையீட்டு...