திருவண்ணாமலையில் பரபரப்பு கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கக்கோரி சாட்டையால் அடித்துக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை, டிச.24: குறைதீர்வு கூட்டங்களில் அளிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கக்கோரி, திருவண்ணாமலையில் விவசாயிகள் சாட்டையால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, குைறதீர்வு கூட்டங்களில் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கும், தபால் மூலம் அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கும் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நேரில் பெறாததால், அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்களும், விவசாயிகளும் போடுகின்றனர். அந்த மனுக்கள் அதிகாரிகளுக்கு சென்று சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்த, ஒப்புகை ரசீதை 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாட்டையால் அடித்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>