பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெரியம்மா பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார்(24). விஜய் ரசிகரும் தவெக தொண்டருமான இவர், தாய் சந்தோஷத்துடன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏடிஎஸ்பி பாலமுருகனிடம் நேற்று மதியம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சரத்குமார் தெரிவித்திருப்பதாவது: பெரியம்மாபாளையம் கிராமத்தில் எனது தாய், பாட்டி, தங்கையுடன் வசித்து வருகிறேன். தவெக மதுரை மாநாட்டிற்கு கடந்த 21ம் தேதி சென்றிருந்தேன்.
மாநாட்டில் முன் வரிசையில் தலைவர் விஜய் நடந்து வரும் பாதை (ரேம்ப் வாக்) அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது, விஜய் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். ஆனால் விஜய்யின் பவுன்சர்கள் என்னை அலேக்காக தூக்கி வீசினர். இதில் எனது மார்பகம், வலது விலா எலும்பு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனக்கு உடல் வலி அதிகமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.
இது குறித்து கட்சி தலைமை பேசுவதாக கூறி, என்னிடம் தவெக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சமரசம் பேசினார்கள். ஆனால் யாரும் என்னை நேரில் வந்து பார்க்க வரவில்லை. என்னை கட்சிக்கு எதிராக பேசாமல் பார்த்து கொண்டார்களே தவிர, எனக்கு எந்தவிதமான முதலுதவியும் அளிக்க முன்வரவில்லை. தற்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். எனவே தவெக தலைவர் விஜய் மீதும், பாதுகாப்பு குண்டர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். குன்னம் காவல் நிலையத்திலும் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
