பெரம்பலூர்: மகனை குப்பையை வீசுவது போல தூக்கி வீசினர். உயிரின் மதிப்பு தெரியாதவர் விஜய் என்று மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் மனவேதனையுடன் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷம். இவரது மகன் சரத்குமார்(26). இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். நடிகர் விஜய் ரசிகரான இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் மதுரையில் கடந்த 21ம் தேதி தவெக சார்பில் 2வது மாநில மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தனது தாய் சந்தோஷத்திடம் திருச்சியில் இன்டர்வியூவுக்கு செல்வதாக கூறி விட்டு மதுரைக்கு சென்றுள்ளார். மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அதற்காக அமைக்கப்பட்டிருந்த ேமடையில் சரத்குமார் ஏறினார். அப்போது விஜய்க்கு பாதுகாப்பாக இருந்த பவுன்சர்களில் ஒருவர் சரத்குமாரை தூக்கி அப்படியே கீழே வீசினார். சரத் குமார் கீழே விழும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சரத்குமாரின் தாய் சந்தோஷம் நேற்று அளித்த பேட்டி: உயிரின் மதிப்பு விஜய்க்கு தெரியவில்லை. எனது மகன் சரத்குமாரை குப்பையில் வீசுவது போல் பவுன்சர்கள் கீழே தள்ளி விட்டனர். இதில் அவன் இறந்திருந்தாலோ அல்லது கை, கால்களில் அடிபட்டிருந்தாலோ எங்களுக்கு தான் கஷ்டம். எங்களது குடும்பம் வறுமையில் வாழும் குடும்பம்.
ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தெரியாத விஜய், ஆட்சிக்கு வந்து என்ன செய்ய போகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு எதுவும் செய்யாத விஜய், பொதுமக்களை ஏமாற்றி வருகிறார். இவரது மாநாட்டுக்கு வந்த இளம் வயது வாலிபர்கள் 2 பேர் இறந்து விட்டனர். அனைவருக்கும் அண்ணனாக, தம்பியாக, தாய் மாமனாக இருந்து நல்லது செய்வேன் என்று கூறும் விஜய், தனது ரசிகர்களுக்கு முதலில் பாதுகாப்பு தரட்டும். இவ்வாறு அவர் கண்ணீர்மல்க கூறினார்.
