×

தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சஸ்பெண்ட் வழக்கு நாளை மீண்டும் விசாரணை

நாமக்கல், டிச.4: கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சஸ்பெண்ட் வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல், கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது செயலாளர் பதவிக்கு ரவி, அருள் ஆகிய இருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அருளின் வேட்புமனுவை, தேர்தல் குழுவினர் தள்ளுபடி செய்தனர். இதனால் ரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு கூட்டத்தின் போது, தீர்மானப் புத்தகத்தை, செயலாளர் ரவி தனது வசம் வைத்துகொண்டார். இதுகுறித்து சங்கத்தின் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டு, மீண்டும் புத்தகம் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் சங்க செயற்குழு கூட்டத்தில், செயலாளர் ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ரவி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  சங்க விதிமுறைகளுக்கு எதிராக தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், மீண்டும் செயலாளராக செயல்பட அனுமதி கேட்டும், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு, நாளை (5ம் தேதி) நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags : Taluka ,Lorry Owners Association Secretary Suspended ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...