மெரினா லூப் சாலையிலிருந்து பெசன்ட் நகர் வரை பாலத்தை மீண்டும் கட்டி, சாலை அமைக்க 411 கோடி செலவாகும்: ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்

சென்னை: மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் நீதிபதிகளிடம், மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, என்றார். அதேபோல், மெரினா கடற்கரையில் இருந்த பழைய கடைகளை அகற்றிவிட்டு புதிதாக  அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் 17 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஏக்வார்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மீன் மார்க்கெட் 1 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்கரையை ஒட்டிய லூப் சாலை இடதுபுறம் நடைபாதை மற்றும்  கடற்கரையிலிருந்து மீன் மார்க்கெட்டுக்கு நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக  பசுமை தீர்ப்பாயம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. சாந்தோம்- பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான உடைந்த பாலத்தை மீண்டும் கட்டி கடல் ஓரமாக சாலை அமைக்க 411 கோடி  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் மட்டும் செல்லும் வகையில் 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க ₹229 கோடி செலவாகும் என்று தெரிவித்தார்.

 இதைக்கேட்ட நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை ஏற்கனவே ஏலத்தில் எடுத்த நிறுவனத்துக்கும், தற்போது நீதிமன்றத்தில் முறையிட்ட நிறுவனத்திற்கும் பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில் விரைவாக கடைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால் இது தொடர்பாக நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.  மேலும், சாந்தோம் மற்றும் அடையாறு பகுதியை இணைக்கும் பாலத்தை கார்களும் செல்லும் வகையில் அமைப்பதே சிறந்தது.

 மீன் மார்க்கெட், நடைபாதை, நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: