என்ஐடி கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக வங்கியில் பணபரிவர்த்தனை

திருவெறும்பூர், டிச.4: திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி தொழில்நுட்ப கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக வங்கி மூலம் பணபரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தொடர்பாக துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி தொழில் நுட்பக்கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என பலநூறு பேர் பணியாற்றி வருகின்றனர். செக்யூரிட்டி பணிக்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கான்ட்ராக்ட் நிறுவனங்களிடமிருந்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் என்ஐடி கல்லூரியில் செக்யூரிட்டி வேலை வாங்கித் தருவதாக என்ஐடி பெயரில் போலியான வங்கி கணக்கு தொடங்கி அதில் பணம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் மின்னஞ்சலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவலறிந்த என்ஐடி பதிவாளர் சின்ரில்லா துவாக்குடி கால்நிலையத்தில் அந்த வங்கி கணக்கை கொடுத்து இது யார் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இதன்பேரில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கிய பிறகுதான் இதுபோல் மோசடிகளில் ஈடுபடுவது முதல்முறையா அல்லது இதுபோல் கல்லூரியில் பல பதவிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கு பணம் பெற்றுக்கொண்டு முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரியவரும்.

Related Stories: