சாலைகள் வெறிச்சோடியது டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

தஞ்சை, டிச. 4: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் அஞ்சலகம் வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜீவக்குமார், மனோகரன், கண்ணன், ஜெயபால், தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி, செந்தில்குமார், அன்பு, திருவையாறு ஒன்றிய செயலாளர் ராஜா, அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் உட்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாவட்ட தலைவர் பாலகுரு மற்றும் மகாலட்சுமி, சந்துரு, பூவரசன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் மருத்துவக்கல்லூரி சாலையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டப்படி ஊர்வலமாக சுங்கத்துறை அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

அப்போது சுங்கத்துறை அலுவலக நுழைவு வாயிலில் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். இதனால் போலீசார், அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் தடுத்தனர். இதனால் இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நுழைவுவாயில் கேட்டில் மாணவர் சந்துரு கால் மாட்டியதால் காயமடைந்தார். மேலும் பூவரசன் என்ற மாணவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மாணவி உட்பட 15 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் காயமடைந்த சந்துரு, பூவரசன் ஆகியோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Related Stories: