
கும்பகோணம், டிச. 4: புரெவி புயல் மீட்பு பணிக்காக சேதுபாவாசத்திரம், முத்துப்பேட்டை பகுதிக்கு குடந்தை தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் சென்றனர். புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புரெவி புயல் நேற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கும்பகோணம் தீயணைப்புத்துறை சார்பில் முன்னணி தீயணைப்பு வீரர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக முத்துப்பேட்டை, சேதுபாவசத்திரம் போன்ற பகுதிகளுக்கு சென்றனர். மீட்பு பணிக்காக ரப்பர் படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ராட்சத டார்ச்லைட், லைப்ஜாக்கெட், ஸ்டெச்சர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை எடுத்து சென்றனர்.