×

சம்பா பயிரில் குலைநோய் தாக்குதல்

தா.பழூர், டிச.4: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள சோழன்மாதேவி, குறிச்சி, இடங்கண்ணி, உள்ளிட்ட கிராமங்களில் தற்போது சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கால நிலை மாற்றங்கள்தான் காரணம் எனவும், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய், குலைநோய் மற்றும் பூச்சி தாக்கங்கள் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளை அணுகியபோது இது பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய், பச்சையம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதல் என்றும், தற்போதுள்ள சீசன் மாற்றத்தால் பணி, மழை, புயல், வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுபோல் ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறிய மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு அளித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்த பாதிப்பு கோடாலி கருப்பூர் கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள சோழமாதேவி, குறிச்சி, இடங்கண்ணி உள்ளிட்ட சுற்று கிராமப் பகுதி வயல்களில் தாக்கம் இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேநிலை நீடித்தால் 80 சதவீத மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்த செய்தி தினகரன் நாளிதழில் சில தினங்களுக்கு முன் வெளியானது இதனை தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர் உத்தரவின்பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ராதாகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குனர் தா.பழூர் வட்டாரம் அசோகன், கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன், தொழில்நுட்ப வல்லுநர் பூச்சியியல் துறை அசோக்குமார் ஆகியோர் குழுவாக சென்று நேரடி வயல் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது இலை சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி, இலைப்புள்ளி நோய் மற்றும் நோயின் தாக்கம் ஆரம்ப நிலையில் உள்ளது.

அதை தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அதன்பின்னர் கிரீடு வேளாண் அறிவியல் மையத்துடன் இணைந்து செயல்படும் இக்கோ கேர் நிறுவனத்தில் பணிபுரியும் கௌதிஸ், முட்டை அட்டை ஒட்டுண்ணியை வயலில் வைப்பது பற்றிய செயல்விளக்கம் அளித்தார். இதையடுத்து தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக வேளாண் அதிகாரிகள் வயல்வெளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.  இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கிய அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Disease attack ,
× RELATED தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் நாய்களுக்கு விநோத நோய் தாக்குதல்