×

திருச்சுழி அருகே 9ம் நூற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

திருச்சுழி, டிச. 4: திருச்சுழி அருகே ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே கீழ்இடையங்குளம் கிராமத்தின் கண்மாய் அருகிலுள்ள தனியார் வயலில் ஒரு சிற்பம் பாதி புதைந்த நிலையில் கிராம மக்கள் சுவாமியை வழிபட்டு வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அப்பகுதிக்கு வரும்போது கற்சிலையை கண்டு கிராம மக்களிடம் விசாரித்தார். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் கிராம மக்கள் தகவல் தந்ததை தொடர்ந்து பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் தர் இந்த சிற்பத்தை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ``இந்த சிற்பம் ஒன்பது நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்த பகுதியில் சமணம் மிக செழிப்பாக இருந்ததை இந்த சிற்பம் உணர்த்துகிறது. இந்த சிற்பம் சமணர்களின் 24வது தீர்த்தங்கரான மஹாவீரரின் சிற்பமாகும். மார்பு வரை புதைந்த நிலையிலும் அழகாக காட்சியளிக்கிறார். தோல்களின் இரண்டு பக்கமும் இயக்கனும், இயக்கியும் காணப்படுகின்றனர். இந்த சிற்பத்தின் தலைக்கு மேல் அரை வட்ட வடிவ பிரபாவளி காணப்படுகிறது. இது ஞானத்தை குறிப்பதாகும். இந்த பிரபாவளிக்கு மேலே காணப்படுவது முக்குடை அமைப்பாகும்.

இதன் தத்துவமானது நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் இந்த முக்குடையின் இருபுறமும் சுருள் வடிவங்கள் காணப்படுகிறது. இது கமுகமரம் அல்லது பிண்டி மரம் ஆகும். பொதுவாக இந்த கமுக மரத்தின்கீழே அமர்ந்து தான் தீர்த்தங்காரர்கள் தவம் செய்வார்கள் என்பது ஐதீகமாகும்’’ என்று கூறினார். நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணி கூறுகையில், ``இந்த சிற்பத்தை நாங்கள் சமணர் சாமி என்று காலம் காலமாக வணங்கி வருகிறோம். இக்கிராம மக்களும் இந்த சிற்பத்தை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இது போன்ற வரலாற்று சான்றுகளை காப்பதன் மூலம் கிராமங்களின் வரலாறுகளை நம் அடுத்த தலைமுறைக்கு தர இயலும்’’ என்றார்.

Tags : Mahavira ,Tiruchirappalli ,
× RELATED ஜவ்வாது மலையில் 7 ஆயிரம் ஆண்டு கற்கால கருவிகள் கண்டெடுப்பு